ராகுல் காந்தி மதவாதத்திற்கு எதிரான வலுவான குரல் - சசி தரூர் பாராட்டு
- ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை
- நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர், ராகுல் காந்தியை தெளிவான பார்வை கொண்ட தலைவர் என்றும், மதவாதத்திற்கு எதிரான நாட்டின் வலுவான குரல்என்றும் பாராட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சசி தரூர் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, தமக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தியை பொறுப்புள்ள மற்றும் தெளிவான பார்வை கொண்ட தலைவர் என பாராட்டிய சசி தரூர், "மதவாதம், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை" என்று கூறினார்.
தனது கருத்துக்கள் பாஜகவிற்கு ஆதரவாக ஊடகங்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மட்டுமே தான் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் கூறினார்.
மேலும், "நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வரும் கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.