இந்தியா

துரோகி முத்திரை.. சட்டவிரோத காவல் - சோனம் வாங்சுக் மனைவி சுப்ரீம் கோர்டில் ஆட்கொணர்வு மனு!

Published On 2025-10-03 13:03 IST   |   Update On 2025-10-03 13:03:00 IST
  • செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
  • பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன.

லடாக்கில் தனி மாநில அந்தஸ்து, 6வது அட்டவணையில் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.

அவருக்கு ஆதரவாக தலைநகர் லேவில் கடந்த செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட வாங்சுக் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் இந்த வன்முறையை தூண்டியதாக செப்டம்பர் 26 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு ராஜஸ்தானின் ஜோத்புர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

இந்நிலையில் தனது கணவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது கணவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரமாகியும், அவரது உடல்நலம், நிலை மற்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்று அங்கமோ தெரிவித்தார்.

முன்னதாக சோனம் வாங்சுக்கின் விடுதலைக்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உடனடி தலையீட்டை ஆங்மோ கோரினார்.

லே போலீசார் சோனம் வாங்சுக்கின் பாகிஸ்தான் சென்றதை குறிப்பிட்டு, அவருக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியது குறித்து விளக்கம் அளித்த அங்மோ, பிப்ரவரியில், பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. அதில் சோனம் பங்கேற்றார். அதில் எந்தத் தவறும் இல்லை, அங்குகூட அவர் மேடையில் பிரதமர் மோடியின் 'மிஷன் லைஃப்' திட்டத்தை பாராட்டினார்" என்று தெரிவித்தார்.

தனது கணவர் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறிய ஆங்மோ, "குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தும் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம், ஆனால் சோனமை அவதூறு செய்யவும், ஆறாவது அட்டவணை இயக்கத்தை பலவீனப்படுத்தவும் ஒரு இருட்டடிப்பு வேலை நடக்கிறது என்று தெரிவித்தார்.  

Tags:    

Similar News