இந்தியா

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைப்பு

Published On 2026-02-03 11:34 IST   |   Update On 2026-02-03 11:34:00 IST
  • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
  • அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.

அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்ட நிலையில் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளியால் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News