இந்தியா

திருவனந்தபுரத்தில் ஒரே வீட்டில் 70 தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்த பெண் போலீஸ்

Published On 2026-02-03 12:00 IST   |   Update On 2026-02-03 12:00:00 IST
  • ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
  • மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கஜகூட்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் மெட்டில்டா. இவர் செங்கோட்டுக்கோணம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்து வந்தார்.

அவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யாமல், சுகாதார விதிகளை கடைபிடிக்காமல் தனது வீட்டில் 70-க்கும் மேற்பட்ட தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்திருக்கிறார். ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.

மெட்டில்டா வளர்த்த தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தபடி இருந்ததாலும், அவை அடிக்கடி ஒன்றாக குறைத்தபடியும், ஊளையிட்டபடியும் இருந்ததாலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாலும் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

ஆகவே அது குறித்து அவர்கள், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குடியிருப்புவாசிகளுக்கு உறுதியளித்தார்.

மேலும் அவர் நேரடியாக களத்தில் இறங்கினார். அவர் பெண் போலீஸ்காரர் மெட்டில்டாவின் வீட்டுக்கு மாநகராட்சி பணியாளர்களுடன் சென்றார். பின்பு அங்கு வளர்க்கப்பட்ட தெருநாய்கள் அனைத்தையும் மாநராட்சி பணியாளர்கள் வலையை பயன்படுத்தி பிடித்தனர். பின்பு அவை பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்டு, பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.

தெருநாய்கள் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், ஒரே இடத்தில் 3 ஆயிரம் தெருநாய்களை பராமரிக்கவும் வசதியாக புதிய காப்பகம் அமைக்க திருவனந்தபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News