இந்தியா

அசாமில் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் மீது நிலவும் கடும் அடக்குமுறை, மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா கவலை

Published On 2026-01-25 14:16 IST   |   Update On 2026-01-25 14:16:00 IST
  • பல வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துக் குழு கவலை தெரிவித்துள்ளது.
  • போலீசார் மக்கள் மீது அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிப்பது மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தலைமையில் பாஜக ஆளும் அசாமில் வாழும் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்டப்படும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஐநா சபை கவலை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு (CERD) இந்தியாவுக்கு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் அசாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், அசாமில் அமலில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடைமுறையில் நிலவும் பாகுபாடுகள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பல வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துக் குழு கவலை தெரிவித்துள்ளது.

மாற்று இடம் அல்லது இழப்பீடு வழங்காமல் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம், வங்க மொழி பேசும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்கள், போலீசார் மக்கள் மீது அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிப்பது மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குறித்துக் கடிதத்தில் CERD சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக இந்தியா அளித்த பதிலில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான விவரங்கள் இல்லை என்று CERD அதிருப்தி தெரிவித்துள்ளது.   

எனவே பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த முறை இந்தியா சமர்ப்பிக்கும் அறிக்கையில் தீர்வுகள் குறித்து விரிவாக விளக்க வேண்டும் என்றும் ஐநா குழு கேட்டுக் கொண்டுள்ளது.    

Tags:    

Similar News