அசுத்த நீரை குடித்து 10 பேர் பலி.. அலட்சியமாக பேசிய அமைச்சரை சர்வாதிகாரி என குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் இடைநீக்கம்
- அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, பயனற்ற கேள்வி என பொருள்தரும் 'காண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில் தனது சொந்த அரசியல் விமர்சனங்களைச் சேர்த்ததற்காக துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தூரில் அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, பயனற்ற கேள்வி என பொருள்தரும் 'காண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அமைச்சரின் இந்த அலட்சியமான பதில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஆனந்த் மாளவியா, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்பாக ஒரு உத்தரவை வெளியிட்டார்.
அந்த அரசு உத்தரவில், காங்கிரஸ் கட்சி அளித்த மனுவில் இடம்பெற்றிருந்த வாசகங்களை அப்படியே சேர்த்திருந்தார். அதில் அமைச்சரின் 'காண்டா' என்ற வார்த்தை பிரயோகம் "மனிதநேயமற்றது மற்றும் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது" என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனமும் இடம்பெற்றிருந்தது.
அரசு சார்ந்த நிர்வாக உத்தரவில் இத்தகைய அரசியல் ரீதியான விமர்சனங்களை சேர்த்ததால் உஜ்ஜைனி மண்டல வருவாய் ஆணையர் ஆஷிஷ் சிங், ஆனந்த் மாளவியாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.