ஜார்க்கண்டில் ஒற்றை யானை அட்டகாசம்: 2 நாட்களில் 13 பேர் பலி - பீதியில் மக்கள்!
- நேற்று ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
- பாதுகாப்புக் கருதி சக்கரதர்பூர் ரயில்வே கோட்டத்தில் 6 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரே ஒரு ஒற்றை காட்டு யானை தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பலரையும் தாக்கிவந்த அந்த ஆண்யானை, நேற்று இரவு (ஜன.5) நோவாமுண்டி மற்றும் ஹட்கம்ஹாரியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புகுந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேரை மிதித்துக் கொன்றது. நேற்று முன்தினம் இதே யானை கோல்ஹான் பகுதியில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் உட்பட 7 பேரைக் கொன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் யானையை மீண்டும் காட்டிற்குள் விரட்ட, மேற்கு வங்கத்தின் பாங்குரா (Bankura) மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், யானைகளின் நடமாட்டம் காரணமாக பாதுகாப்புக் கருதி சக்கரதர்பூர் ரயில்வே கோட்டத்தில் 6 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக தலா ரூ.20,000 நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. யானை தாக்குதலைத் தடுக்க வனத்துறை தவறிவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் மது கோடா மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த மாவட்டத்தில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.