null
BPL தொடரிலிருந்து நீக்கம்? - இந்தியத் தொகுப்பாளினி ரிதிமா பதக் விளக்கம்
- தொடரில் இருந்து விலகியது எனது தனிப்பட்ட முடிவு.
- முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது
வங்கதேச பிரீமியர் லீக் தொடர் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டியை ஒளிபரப்பும் குழுவில் இருந்து இந்தியத் தொகுப்பாளினி ரிதிமா பதக் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் தனது சுயவிருப்பத்தின்பேரிலே தொடரில் இருந்து தானாகவே விலகியதாக ரிதிமா பதக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"கடந்த சில மணிநேரங்களாக, நான் BPL-ல் இருந்து 'நீக்கப்பட்டேன்' என்று செய்திகள் பரவிவருகிறது. அது உண்மையல்ல. விலகுவது எனது தனிப்பட்ட முடிவு. நாட்டிற்கே எனது முதல் முன்னுரிமை. மேலும் கிரிக்கெட்டை நான் அனைத்திற்கும் மேலாக மதிக்கிறேன். பல ஆண்டுகளாக இந்த விளையாட்டுக்கு நேர்மை, மரியாதை மற்றும் ஆர்வத்துடன் சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அது மாறாது. நான் தொடர்ந்து நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் விளையாட்டின் உன்னத உணர்வுக்காகவும் துணைநிற்பேன்.
ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் செய்திகள் நீங்கள் நினைத்ததை விட எனக்கு மிக முக்கியமானது. கிரிக்கெட் உண்மைக்கு தகுதியானது. அவ்வளவுதான். என் தரப்பிலிருந்து இதற்கு மேல் எந்தக் கருத்தும் இல்லை." எனக் குறிப்பிட்டுள்ளார். ரிதிமா பதக்கின் நீக்கமோ அல்லது விலகலோ எதுவாகினும், இது வங்கதேசத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே நிலவிவரும் மோதல்போக்கில் இன்னும் பெட்ரோலை ஊற்றி உள்ளது என்றேக் கூறவேண்டும்.
முன்னதாக வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் காரணமாக முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. இதற்குப் பதிலடியாக ஐபிஎல் ஒளிபரப்பை வங்கதேசம் தடை செய்ததும், தனது உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்தக் கோரியதும் குறிப்பிடத்தக்கது.