இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் பகைமை முடிவுக்கு வர வேண்டும் எனக் கோருவது தேசத்துரோகம் அல்ல - உயர்நீதிமன்றம்

Published On 2026-01-07 04:52 IST   |   Update On 2026-01-07 10:26:00 IST
  • பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
  • மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தேசத்துரோகமாகக் கருதப்படாது என இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேஸ்புக்கில் பாகிஸ்தான் கொடி மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் படங்களை பதிவேற்றியதாகக் கூறி அபிஷேக் சிங் பரத்வாஜ் என்பவர் மீது இமாச்சலப் பிரதேச போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்ததாகவும், பாகிஸ்தான் நபருடன் உரையாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அபிஷேக் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது பேசிய நீதிபதிகள், "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் வீணானது என்றும், இரு நாடுகளும் பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

மேலும், அவரது சமூக வலைதளப் பதிவுகளில் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் எதுவும் இல்லை.

மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல" என்று தெரிவித்தனர். 

Tags:    

Similar News