இந்தியா

பைக்கில் சென்றபடி மாணவியின் தலை முடியை பிடித்து இழுத்து சென்ற போலீசார்

Published On 2024-01-25 05:00 GMT   |   Update On 2024-01-25 05:00 GMT
  • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
  • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

Tags:    

Similar News