இந்தியா

பாம்பை வைத்து கணவனை கொன்ற மனைவி: கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரம்

Published On 2023-10-14 09:44 IST   |   Update On 2023-10-14 09:44:00 IST
  • போலீசார் சந்தேகத்தின் பேரில் லலிதாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
  • சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ், சீனிவாஸ், கணேஷ் மற்றும் பாம்பு பிடிக்கும் சந்திர சேகர் ஆகியோருடன் பிரவீன் வீட்டிற்கு வந்தார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கோதாவரி கனி மண்டலம், மார்க்கண்டேய காலனியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 42) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்ததால் பிரவீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

லலிதா கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்தது.

இதனால் விரத்தி அடைந்த பிரவீன் மது போதைக்கு அடிமையானார். கள்ளக்காதலை கணவர் கைவிடாததால் ஆத்திரம் அடைந்த லலிதா கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி பிரவீன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்யும் ராமகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் ஒத்துழைப்பை லலிதா நாடினார்.

கணவரை கொலை செய்து விட்டால் ஒரு வீட்டுமனை பட்டா தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதையடுத்து கடந்த 10-ந்தேதி இரவு பிரவீன் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். கணவர் மது போதையில் தூங்குவது குறித்து லலிதா சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ், சீனிவாஸ், கணேஷ் மற்றும் பாம்பு பிடிக்கும் சந்திர சேகர் ஆகியோருடன் பிரவீன் வீட்டிற்கு வந்தார்.

மரணம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சுரேஷ் அவரது நண்பர்கள் பிரவீனை கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

சந்திரசேகர் விஷப்பாம்பை கொண்டு பிரவீனை கடிக்க வைத்தார். இதில் வாயில் நுரை தள்ளியபடி பிரவீன் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து சென்றனர்.

கணவர் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக லலிதா நாடகமாடினார்.

போலீசார் சந்தேகத்தின் பேரில் லலிதாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததை லலிதா ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News