'கர்நாடக முதலமைச்சராக அடுத்த மாதம் சிவகுமார் பதவியேற்பார்' - காங்கிரஸ் எம்.எல்.ஏ உறுதி!
- தலைவர் சிவக்குமார் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், நிச்சயமாக அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால்தான் சொல்வார்.
- சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'பதவிப் பகிர்வு' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஊகங்கள் எழுகின்றன
கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் அடுத்த மாத தொடக்கத்தில் பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் மீண்டும் கூறியுள்ளார். சிவகுமாரின் ஆதரவாளரான ராமநகரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜனவரி 6 அல்லது 9 ஆம் தேதிகளில் 200% சிவகுமார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'தலைவர் சிவக்குமார் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், நிச்சயமாக அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால்தான் சொல்வார். இல்லையென்றால் அவர் அப்படி சொல்லியிருக்கமாட்டார்' என தெரிவித்தார்.
கர்நாடகாவில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. 2023-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'பதவிப் பகிர்வு' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த ஊகங்கள் எழுந்து வருகின்றன.
சிவக்குமாரின் தீவிர ஆதரவாளர்கள் அவருக்குப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், சித்தராமையாவிற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் ஜனவரி 25-ல் மைசூரில் பெரிய அளவிலான மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே ஜனவரி 6-ஆம் தேதிக்குப் பிறகு, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்புக்குப் பிறகே முதலமைச்சர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு தலைவர்களும் தாங்கள் கட்சி மேலிடத்தின் முடிவிற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறியுள்ளனர். அதேசமயம் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிடம் தன் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தான்தான் ஐந்தாண்டு காலமும் பதவியில் நீடிப்பேன் என்றும் டிசம்பர் 19 அன்று சட்டப்பேரவையில் தெரிவித்த்து குறிப்பிடத்தக்கது.