திருச்சூரில் நடப்பது போர் அல்ல.... போராட்டம்- சுரேஷ்கோபி
- பாரதிய ஜனதா கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
- திருச்சூர் சென்ற சுரேஷ்கோபிக்கு பாரதிய ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
கேரளாவில் இந்த முறை வெற்றியை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அங்கு தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். அந்த மாநிலத்தில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகரும், பாரதிய ஜனதா பிரமுகருமான சுரேஷ்கோபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு அவர், தேர்தல் பிரசாரத்திற்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளார். நேற்று திருச்சூர் சென்ற சுரேஷ்கோபிக்கு பாரதிய ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரெயில் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் அணிவகுக்க அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியினரின் வரவேற்பு உற்சாகம் அளிப்பதாகவும் வெற்றி பெறும் நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். மேலும் திருச்சூரில் நடப்பது போர் அல்ல... போராட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.