இந்தியா

மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது- சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து

Published On 2025-02-07 14:40 IST   |   Update On 2025-02-07 14:44:00 IST
  • யு.ஜி.சி. விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது.
  • அரசியலமைப்பின் கீழ் கவர்னருக்கு 4 அதிகாரங்கள் உள்ளது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் 3 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களின் நியமன விவகாரத்தில் கவர்னரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குகளை தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக் கிழமை) விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், 'கவர்னர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்? அவர் சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்? மேலும் சம்மந்தப்பட்ட மசோதா மீது, தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி கவர்னர் உணர்ந்தார்? இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள்' என்று கவர்னர் தரப்புக்கு அறிவுறுத்தினார்கள்.

அதற்கு கவர்னர் தரப்பில், 'அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதா மாநில அரசால் கொண்டுவரப்பட்டது. கவர்னர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் கவர்னர் என இரு தரப்பும் இணைந்து இந்த விவகா ரத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்பலாம். குறிப்பாக மாநில அரசே, இதன் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என்று கவர்னரை கேட்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது. இதை விடுத்து கவர்னர் அரசியலமைப்பு பிரிவு 200-ன் விதி 1-ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது பிரிவு 200-ஐ முரணாக திரித்து கூறுவதாகும்' என்று பதில் அளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், 'மசோதா மீது முடிவு எதுவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன நடவடிக்கை?' என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கவர்னர் தரப்பில், 'தமிழக அரசு துணைவேந்தர் நியமனத்தில் கொண்டு வந்த நடைமுறை மத்திய அரசின் சட்டத்துக்கு, விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவ்வாறு சட்டங்களுக்கு எதிராக உள்ளதற்கு கவர்னர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்' என்று கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், 'பல்கலைக்கழக மசோதா, மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? கவர்னர் அரசுக்கு முட்டுக் கட்டையாக உள்ளார். அதனை நீக்க வேண்டும். மசோதா விவகாரத்தில் கவர்னர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது' என்றனர்.

அதற்கு கவர்னர் தரப்பில், 'பல்கலைகழகங்களின் செயல்பாடு குறித்து கவர்னர் கடிதம் பெறுகிறார். துணைவேந்தரின் மாநாடு நடைபெற இருந்தது. தயவு செய்து அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது. யு.ஜி.சி. விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது.

நாடு முழுவதும் மாநிலங்களுக்கும், கவர்னர்களுக்கும் இடையே முரண்பாடு மற்றும் கவர்னர்களுக்கு எதிராக புகார்கள் உள்ளதாக கூறலாம். ஆனால் தனது கருத்தை வெளிப்படுத்தி மசோதாவில் திருத்தம் செய்து சரியான, இரு தரப்புக்கும் சாதகமான பரிந்துரைகளை சேர்க்க விரும்புகிறார் என்றே கூற முடியும்.

அரசியலமைப்பின் கீழ் கவர்னருக்கு 4 அதிகாரங்கள் உள்ளது. ஒப்புதல் தருவது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது ஆகியவை ஆகும். மசோதாவுக்கு ஒப்புதலை வழங்காமல் நிறுத்தி வைக்கும்போது இவ்வாறு தான் செயல்பட வேண்டும் என எந்த நேரடி விதிகளும் அரசியலமைப்பில் இல்லை.

கவர்னரிடம் அல்லது ஜனாதிபதியிடம் மசோதா நிலுவையில் இருக்கும்போது அது சட்டப்பேரவையில் காலாவதியாகாது. எனவே தான் முடிவெடுக்க கவர்னருக்கு எந்த கால நிர்ணயமும் அரசியல் சாசனத்தில் செய்யப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், 'கடந்த 2023-ம் ஆண்டு மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட பின்னர் தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். 2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?' என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கவர்னர் தரப்பில், 'இல்லை. மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். கவர்னர், அரசியல் சாசனம் 200-ன் முதல் விதி மூலம் முடிவெடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. எல்லா சந்தர்ப்பங்களிலும் மசோதாவை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

சட்டப்பிரிவு 200-ன் எந்த பகுதியிலும் ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்புவது தடுக்கப்படவில்லை. மேலும், மேற்கூறிய விவகாரங்களில் நீதிமன்றத்தின் மூலம் மறுஆய்வு செய்வதற்காக வழிமுறை, சாத்தியக்கூறுகள் என்பது மிகவும் குறுகியது ஆகும். அதேபோல, அரசியல் சாசன பிரிவு 200-ஐ அரசியல் சாசன பிரிவு 254 உடன் படித்தால், எந்த நிலையிலும் ஒரு மசோதாவை ஜனாதிபதிக்கு முடிவெடுக்க அனுப்புவதற்கான வழிமுறை என்பது எப்போதும் உண்டு. அதை குறிப்பிட்ட நிலையில் தான் அனுப்ப முடியும் என்று இல்லை' என்று கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், 'ஜனாதிபதி மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா' என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கவர்னர் தரப்பில், 'ஒப்புதல் இல்லாமல் தற்போது, ஜனாதிபதியிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் யாரிடமும் கேட்க வேண்டியது இல்லை' என்று கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், 'அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா' என்று கேட்டனர். அதற்கு கவர்னர் தரப்பில், 'கவர்னரின் பணிகள் என்பது அரசியலமைப்பின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு அங்கம் ஆகும். மேலும் கவர்னருக்கு அனுப்பிய அனைத்து மசோதாக்களும் புதிய சட்டங்கள் அல்ல, மாறாக அவை சட்ட திருத்தங்கள். அதனை ஜனாதிபதியின் முடிவுக்காக கவர்னர் நிறுத்தி வைக்கிறார்' என்றனர்.

அதற்கு நீதிபதிகள், 'உங்கள் வாதப்படி பல்கலைக்கழகங்களின் தரம், துணைவேந்தர்கள் குறித்து கவலை கொண்டு மசோதாக்களை நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன?' என்று கேட்டனர். அதற்கு கவர்னர் தரப்பில், 'மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியபோது எதற்காக என்று அதற்கான காரணத்தை ஒரு கட்டுரை போல எழுத தேவையில்லை. ஏனெனில் மசோதாவை ஜனாதிபதிக்கு, கவர்னர் அனுப்புகிறார் என்றால், அது அவரின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை என்பது தான். அதை அவர் சிறிய குறிப்பாக ஜனாதிபதி முடிவுக்கு அனுப்புகிறேன் என கூறியுள்ளார். மேலும் அரசு சட்டத்தை நிறைவேற்றும்போது அமைச்சரவையின் ஆலோசனை மூலமே கொண்டு வரும். அந்த சட்டத்தில் முரண் இருந்தால், அந்த சட்டம் சரியானது அல்ல, அதனை சரி செய்யுங்கள் என தெரியப்படுத்துவது கவர்னரின் கடமை ஆகும்' என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், 'கவர்னர் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய போது என்ன குறிப்பை தெரிவித்து அனுப்பினார் ? ஏனெனில் இந்த மசோதா மீது முடிவெடுக்க தனக்கு அதிகாரம் இல்லை, ஏனெனில் ஜனாதிபதியே ஆராய்ந்து முடிவு எடுங்கள் என கூறினாரா? அல்லது எதன் அடிப்படையில் அனுப்பினார் என்பதை விளக்குங்கள் ? வெறுமனே குறிப்பு இல்லாமல் ஒரு மசோதாவை அனுப்பினார் என்றால் ஏன் ? என்று கேட்டனர்.

அதற்கு கவர்னர் தரப்பில், 'ஜனாதிபதிக்கு மசோதாவை கவர்னர் அனுப்பும் போது எதற்காக அனுப்புகிறார் என்ற காரணத்தை கூற தேவை இல்லை' என்றனர்.

அதற்கு நீதிபதிகள், 'ஜனாதிபதிக்கு மசோதாவை கவர்னர் அனுப்பும் போது, எதற்காக அனுப்புகிறார் என்ற காரணத்தை கூற தேவை இல்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. கவர்னர் ஏதாவது ஒரு காரணத்தை ஜனாதிபதிக்கு தெரிவிக்க வேண்டும். நாட்டின் ஜனாதிபதி அவராகவே கேட்டு தெரிந்து கொள்வாரா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு கவர்னர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்றது. 

Tags:    

Similar News