83.61% EVM-ஐ நம்பும் கர்நாடக மக்கள்... ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் பாஜக!
- 2024 நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது
- ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்ததாகக் கூறப்படும் 'வாக்குத் திருட்டு' குறித்து மட்டும் ஏன் பேசவில்லை?
இந்தியாவில் பண மற்றும் நேரச்செலவை மிச்சப்படுத்தவும், தேர்தலை எளிமையாக்கவும் கடந்த பல ஆண்டுகளாகவே மின்னணு இயந்திரங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நேரம், பொருட்செலவை கணக்கில் கொண்டாலும் இயந்திரங்கள் மூலம் தேர்தலில் மோசடி நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. சமீபத்தில் கூட பீகார் தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி வாக்கு திருட்டு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெரும்பாலான மக்கள் வாக்குச்சீட்டு முறையைவிட மின்னணு இயந்திரங்களைதான் நம்புகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பொதுமக்களுக்கு வலுவான நம்பிக்கை இருப்பதைக் காட்டியுள்ளது என பல்வேறு ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெங்களூரு, பெலகாவி, கலபுரகி மற்றும் மைசூரு ஆகிய நிர்வாகப் பிரிவுகளில் உள்ள 102 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 5,100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. "Evaluation of Endline Survey of KAP (Knowledge, Attitude and Practice) of Citizens" என்ற தலைப்பிலான கணக்கெடுப்பின்படி, 83.61% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்று தாங்கள் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். 69.39% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன எனக்கூறியுள்ளனர். 14.22% பேர் இதனை ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் இந்த சர்வேவை குறிப்பிட்டு கர்நாடக பாஜக தலைவர் ஆர். அசோக், ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், 'பல ஆண்டுகளாக, ராகுல் காந்தி நாடு முழுவதும் பயணம் செய்து ஒரே ஒரு கதையைச் சொல்லி வருகிறார்: இந்தியாவின் ஜனநாயகம் 'ஆபத்தில்' இருக்கிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 'நம்பகமற்றவை', நமது நிறுவனங்களை நம்ப முடியாது என்பதுதான் அது. ஆனால், கர்நாடகா இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையைச் சொல்லியிருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநிலம் தழுவிய இந்த ஆய்வு, மக்கள் தேர்தல்களை நம்புகிறார்கள், மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள், மேலும் மக்கள் இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை நம்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியதாக தெரிவித்த பாஜக, இது காங்கிரஸுக்கு ஒரு சம்மட்டி அடி எனவும் தெரிவித்துள்ளது.
பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலளித்த கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, இந்த ஆய்வு மாநில அரசால் நடத்தப்படவில்லை என்றும், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது என்றும், மேலும் அதை வெளியிட்டது ஒரு அரசு நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரியங்க் கார்கேவை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இந்தக் கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டும் பாஜக, கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்ததாகக் கூறப்படும் 'வாக்குத் திருட்டு' குறித்து மட்டும் ஏன் பேசவில்லை என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.