VIDEO: நபரின் முதுகை செல்போனில் ஸ்கேன் செய்து "நீ வங்கதேசத்தை சேர்ந்தவன்" என்று கூறிய உ.பி. போலீஸ்!
- வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் கூறினர்.
- அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் அம்மாநில போலீசார் சிலர் அதிரடியாக நுழைந்து அங்கு யாராவது வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக வசிக்கிறீர்களா? என சோதனையிட்டனர்.
இதன்போது ஒரு போலீஸ், அங்கு வசிக்கும் ஒருவரின் முதுகை தனது செல்போனில் ஸ்கேன் செய்து போல தேய்த்து நீ வங்கதேசத்தை சேர்த்தவன் என இதில் காட்டுகிறது என கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவில், போலீஸ்காரர், அந்த நபரின் முதுகில் மொபைல் போனை வைத்து, சூப்பர் மார்க்கெட் பார்கோடு ஸ்கேனர் போல தேய்க்கிறார். அந்த நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விலாசம் இதன் மூலம் தெரிந்துவிடும் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் ரோஷ்னி இன்று, செய்தியாளர்களிடம் பேசுகையில், டிசம்பர் 23 அன்று உள்ளூர் காவல் நிலைய அதிகாரி (SHO) தலைமையிலான போலீசார் எங்கள் பகுதிக்கு வந்தனர்.
எங்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டனர். நாங்களும் ஆவணங்களைக் காட்டினோம்.
வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் எங்களிடம் கிண்டலாகக் கூறினர்.
ஆனால் உண்மையில் அங்கே எந்த இயந்திரமும் இல்லை. அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா என்பது தெரிந்துவிடும் என்று கூறினர்.
நாங்கள் 1986 முதல் இங்கே வசிக்கிறோம். எங்கள் பூர்வீகம் பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் ஆகும். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு போலீசார் அங்கிருந்து சென்றனர்" என்று தெரிவித்தார்.
போலீசாரின் இந்த செய்கை, மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து உண்மையையே வரவழைக்கவே இவ்வாறு செய்ததாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தனது செயலுக்கு நியாயம் கூறியுள்ளார்.