இந்தியா

X தளத்தில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் 'Grok' AI - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி எம்.பி. கடிதம்

Published On 2026-01-02 14:34 IST   |   Update On 2026-01-02 14:34:00 IST
  • Grok AI இடம் Prompt மூலம், அந்தப் பெண்களின் ஆடைகளைக் குறைத்தும், அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கவும் கூறுகின்றனர்.
  • கீழ்த்தரமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் 'Grok' இத்தகு நடத்தையை ஊக்குவிக்கிறது.

எக்ஸ் தளத்தில் உள்ள Grok செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெண்களை தவறாக சித்தரிக்க பயன்படுத்தப்படுவது குறித்து உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா சதுர்வேதி, மத்திய ரெயில்வே மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதத்தில், "

சமூக வலைதளங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில் ஒரு புதிய ஆபத்தான போக்கு உருவெடுத்துள்ளது.

எக்ஸ் தளத்தின் 'Grok AI' வசதியைப் பயன்படுத்தி, ஆண்கள் சிலர் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுகின்றனர்.

பின்னர் அந்த Grok AI இடம் Prompt மூலம், அந்தப் பெண்களின் ஆடைகளைக் குறைத்தும், அவர்களை ஆபாசமாகவும் சித்தரிக்கவும் கூறுகின்றனர். Grok ஏஐயும் அப்பெண்களின் ஆடைகளை குறைகிறது.

இது சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றும் பெண்களையும் குறிவைத்து நடத்தப்படுகிறது.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இத்தகைய கீழ்த்தரமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் 'Grok' இத்தகு நடத்தையை ஊக்குவிக்கிறது.

இது பெண்களின் தனியுரிமையை மீறுவதுடன், அவர்களின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதுமாகும்.

பெண்களுக்கான பாதுகாப்பான இடமாக இந்தத் தளம் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தங்கள் ஏஐ செயலிகளில் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் நீங்கள் அமைச்சராக வலுவாக வலியுறுத்த வேண்டும்.

இதே போன்ற போக்குகள் மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தளங்களிலும் எந்தத் தடையுமின்றி அரங்கேறுவதை நாம் பார்க்கிறோம்.

பொதுவெளியிலும் டிஜிட்டல் முறையிலும் பெண்களின் கண்ணியம் மீறப்படுவதை நம் நாடு வேடிக்கை பார்க்க முடியாது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இதை எடுத்துரைக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News