இரவில் வீதிகளில் போதையில் தள்ளாடிய இளைஞர்கள்.. பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்ட வீடியோக்கள் வைரல்
- இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
- இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.
அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.
அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.
ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.