இந்தியா

"ஒரே நாடு, ஒரே தேர்தல்": அரசியல் கட்சிகள், சட்ட ஆணையம் கருத்துக்களை கோர கமிட்டி முடிவு

Published On 2023-09-23 13:28 GMT   |   Update On 2023-09-23 13:28 GMT
  • இதனால் பெருமளவில் பொருள், நேரம், மனிதவளங்கள் மிச்சமாகும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது
  • முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட கமிட்டி அமைக்கப்பட்டது

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் பெருமளவில் பொருள், நேர மற்றும் மனிதவள விரையங்கள் தடுக்கப்படுவதுடன், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய முடிவுகளை தொலைநோக்கோடு எடுப்பதற்கும் இது உதவும் என்பதால் இதனை தீவிரமாக ஆளும் பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட கமிட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்று அந்த கமிட்டியின் முதல் சந்திப்பு நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணைய இயக்குனர் என் கே சிங், முன்னாள் மக்களவை பொது செயலாளர் சுபாஷ் கஷ்யப் மற்றும் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கு பெற்றனர்.

முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இவை மட்டுமல்லாமல் சட்ட ஆணையத்தின் கருத்தை கேட்கவும் சட்டத்துறை முடிவெடுத்துள்ளது.

இந்த சந்திப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கலந்து கொள்ளவில்லை. அவரையும் உறுப்பினராக்கியிருந்தும், தான் இதில் பங்கு பெற விரும்பவில்லை என அவர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேலும் சில மாநிலங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் அமலுக்கு வந்தால் இந்த மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News