கார்கே, ராகுலுடன் சந்திப்பு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சசி தரூர்
- சசிதரூர் சமீப காலமாக பிரதமர் மோடி, மத்திய அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகிறார்.
- கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் உரிய மரியாதை வழங்கவில்லை என்றார் சசிதரூர்.
புதுடெல்லி:
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை மேடையில் இருந்த ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகளுடன் கை குலுக்கினார். அப்போது மேடையில் நின்றிருந்த சசி தரூரை ராகுல் காந்தி கண்டு கொள்ளவே இல்லை. அவருடன் பேசுவதை தவிர்த்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சசி தரூர் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கேவைச் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கே அறையில் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதன்பின், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், நாங்கள் ஒரு கலந்துரையாடல் மற்றும் மிகச் சிறந்த, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். எல்லாம் நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றாகச் செல்கிறோம். இதற்குமேல் என்ன சொல்ல முடியும்.
நான் ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எனது வாக்காளர்களின் நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்களின் நலன்களைக் கவனிப்பதுதான் எனது வேலை என தெரிவித்தார்.