கோலாகலமாக நடைபெற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
- இந்த விழாவுக்கு குதிரைப்படை சூழ ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து வரப்பட்டார்.
- ராணுவம், கடற்படை, விமானப்படைகளின் இசைக்குழு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
புதுடெல்லி:
77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியின் விஜய் சவுக்கில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு குதிரைப்படை சூழ ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து வரப்பட்டார். பாசறை திரும்பும் நிகழ்வை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மத்திய மந்திரிகள் நேரில் கண்டுகளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சோஷியல் மீடியா பதிவில், "இவ்விழா இந்தியாவின் செழுமையான இராணுவப் பாரம்பரிய வலிமையை வெளிப்படுத்தும்" எனக் குறிப்பிட்டார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் ஆயுதப் படைகள் குறித்து ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, மத்திய ஆயுதக் காவல் படைகளின் இசைக்குழுக்களின் 30 நிகழ்ச்சிகள் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்தன.
விழாவின் உச்சகட்டமாக, 'சாரே ஜஹான் சே அச்சா' பாடல் இசைக்கப்பட்டு, தேசியக்கொடி இறக்கப்பட்டு குடியரசு தின கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தன