தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும்- செல்வப்பெருந்தகை
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.
- பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும்.
புதுடெல்லி:
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர்கள் கிரிஸ்சோடங்கர், சூரஜ் ஹெக்டே, ஆலுவா ஆகியோர் இன்று கூடி ஆலோசித்தனர்.
இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்துள்ளார்கள். அப்போது 40 தொகுதிகள் கேட்டு வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் முன் தயாரிப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதித்தோம். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதே எங்கள் இலக்கு.
டெல்லியில் நாளை (செவ்வாய்)யும் தொடர்ந்து ஆலோசிக்க இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்றார்.
பேட்டியின்போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.