RailOne| ஒரு நிமிடத்துக்கு 1.5 லட்சம் டிக்கெட் எடுக்கலாம் - ரெயில்ஒன் சூப்பர் செயலியில் புது அப்டேட்
- தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் 30 வினாடிகளில் இருந்து 3 முதல் 5 வினாடிகளாக குறையும்.
- ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்தியாவில் தினமும் 2.3 கோடி மக்கள் ரெயில்களை பயன்படுத்துகிறார்கள். இந்திய ரெயில்வே, 1986-ம் ஆண்டில் இருந்தே பயணிகள் முன்பதிவு அமைப்பு (பி.ஆர்.எஸ்.) எனப்படும் முன்பதிவு நடைமுறையையே பயன்படுத்தி வருகிறது.
இது பல ஆண்டுகளாக சிக்கல்களை சந்தித்து வந்தது. தட்கல் முன்பதிவின் போது அடிக்கடி செயலி செயலிழப்பது, 30 வினாடி தாமதம் ஏற்படுவது மற்றும் தொழில்நுட்ப சிக்கல் என பல பிரச்சனைகள் இருந்தது.
ஒவ்வொரு நாளும் இது ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில் பழைய நடைமுறையை மாற்றியமைத்து, 5 மடங்கு வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் அடுத்த தலைமுறை அமைப்பு அறிமுகமாக உள்ளது.
அதாவது தற்போதைய பயணிகள் முன்பதிவு அமைப்பு நிமிடத்திற்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகளை கையாளும் தன்மை கொண்டது. புதிய அமைப்பானது கிளவுட்-நேட்டிவ் மைக்ரோ சர்வீசஸ் கட்டமைப்பு மூலம் ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
இதன் மூலம், தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் 30 வினாடிகளில் இருந்து 3 முதல் 5 வினாடிகளாக குறையும். அதேபோல் இப்போது தட்கல் டிக்கெட் எடுக்கும்போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்படுகிறது. இதனால் உண்மையாகவே டிக்கெட் கிடைக்க வேண்டிய மக்களுக்கு அவை கிடைப்பதில்லை.
இந்த தொழில்நுட்ப சிக்கலை கண்டறிந்து அதை சரிசெய்யும் தொழில்நுட்பமும் இந்த புதிய அமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளையும் தடுக்கும். அதிக தேவை உள்ள முன்பதிவுகளுக்கு ஆதார் ஓ.டி.பி. மற்றும் முக அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டு, இணைய அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படும்.
குபெர்னெட்ஸ் தொழில் நுட்பம் ஒருங்கிணைந்த கிளஸ்டர்கள் மூலம் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக டிக்கெட்டுகள் கையாள முடியும். இது தற்போதைய 2 கோடி தினசரி பரிவர்த்தனைகளை விட 10 மடங்கு அதிகமாகும். பி.ஆர்.எஸ்., யு.டி.எஸ். மற்றும் இ-டெண்டரிங் ஆகியவற்றை "ரெயில்ஒன் சூப்பர் செயலி" என்ற ஒற்றை தளத்தில் இணைத்து, டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்தல், பணத்தை திரும்ப பெறுதல், பி.என்.ஆர். நிலை, இருக்கையின் தன்மை போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஒரே உள் நுழைவை இது வழங்கும்.
ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். சரிபார்க்கப்படாத பயன்பாட்டாளர்கள் 2-ம் நாளில் இருந்து முன்பதிவு செய்ய வேண்டும். இதுவே மோசடியை ஓரளவுக்கு தடுக்கும்.
இதில் தற்போதைய இருக்கையின் நிலை, நடைமேடை எண்கள், ரெயில் டிக்கெட் கட்டண விவரம் என எல்லாமே இருக்கும். அதேபோல காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளின் உறுதிப்படுத்தும் வாய்ப்பும் கணிசமாக மேம்படும்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் மோசடிகள் குறைக்கப்பட்டு ஆண்டுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் கோடி பாதுகாக்கப்படும். ரூ.500 கோடி மதிப்பிலான தட்கல் கருப்பு சந்தை தடுக்கப்படும். மேலும், பிரீமியம் ரெயில்களில் மாறும் விலை நிர்ணயம் செய்வதன் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது வழக்கமான சாப்ட்வேர் மேம்பாடு மட்டுமல்லாமல், 2047-ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் அதிவேக ஹைப்பர்லூப் ரெயில்களின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1986-ம் ஆண்டில் இருந்த 2ஜி டிக்கெட்டிங்கில் இருந்து 2026-ம் ஆண்டுக்கான 6ஜி டிக்கெட்டிங்கிற்கு முன்னேற்றம் அடையவுள்ளது. இது பண்டிகை காலங்களில் ரெயில்களை பயன்படுத்தும் பல கோடி பேருக்கு வரபிரசாதமாக அமையும்.