இந்தியா

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2024-04-01 09:46 GMT   |   Update On 2024-04-01 09:46 GMT
  • செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
  • வருகிற 29-ந்தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

புதுடெல்லி:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த பிப்ரவரி 28-ந்தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் அவர் மீதான வழக்கு விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவில், 'செந்தில் பாலாஜி 280 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பைபாஸ் சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி உடல் பரிசோதனை செய்து வருகிறார்.

அவருக்கு ஜாமீன் வழங்க எந்தவொரு நிபந்தனையையும் ஏற்க தயார். விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயார்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல், ஆஜராகி, 'இந்த மேல்முறையீடு மனுவை பரிசீலிக்க வேண்டும்' என தெரிவித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வருகிற 29-ந்தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் கீழமை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் முறையிடப்பட்டது. அந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

Tags:    

Similar News