சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!
- டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
- மாசு கலந்த காற்று மற்றும் கடும் குளிர் ஆகியவையே உடல்நிலை மோசமடைய காரணம்
ஆஸ்துமா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்று மாலை 5 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தொடர்ந்து வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாசு கலந்த காற்று மற்றும் கடும் குளிர் ஆகியவற்றின் காரணமாகவே அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இவையே அவருக்கு சுவாசக் கோளாறுகளைத் தூண்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சை முறையின் ஒரு பகுதியாக அவருக்கு ஆன்டிபயாடிக்குகள் மற்றும் பிற துணை மருந்துகள் வழங்கப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே அவரது உடல்நிலை சீரடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஆஸ்துமா அதிகரிப்பு மற்றும் நெஞ்சு தொற்று தொடர்பான சுவாசக் கோளாறுகள் இருந்ததால், அவரது உடல்நிலை முன்னேறிய பிறகும் மருத்துவக் குழுவினர் அவரைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.