இந்தியா

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம் பதிவு

Published On 2026-01-30 10:28 IST   |   Update On 2026-01-30 10:28:00 IST
  • சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீ வருவும் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
  • நடிகர் ஜெயராம் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதானத்திற்கு இருபுறமும் துவார பாலகர்கள் சிலை இருக்கிறது.

அந்த சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக்கவசம் மற்றும் சன்னிதான நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிட அனுப்பி வைக்கப்பட்டது.

பின்பு அவை சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது 4.54 கிலோ கிராம் தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் தங்கம் மாயமான விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அவை செப்பனிட கொண்டு செல்லப்பட்ட இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிந்து கேரள தேவசம்போர்ட்டின் முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் மூத்த தந்திரி கண்டரரு ராஜீ வருவும் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டார். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் தினமும் பல புதிய தகவல்கள் கிடைத்து வந்தது மட்டுமின்றி, பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் கடந்த 19-ந்தேதி அதிரடி சோதனை நடத்தியது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது 100 கிராம் தங்க கட்டி மற்றும் வழக்கு தொடரபான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்க தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சென்றனர்.

அவரிடம் தங்கம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணனுடனான தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. புனரமைக்க கொண்டு செல்லப்பட்டிருந்த துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் தங்கத்தகடு உள்ளிட்டவைகள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்த படங்கள் வெளியாகின.

ஆகவே அவரும் தங்க கொள்ளை வழக்கு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மேலும் அவரை இந்த வழக்கில் சாட்சியாக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமுலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் ஜெயராம் கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று வருகிறார். அப்போது தனக்கு உன்னிகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். சபரிமலைக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தகடை வீட்டில் பூஜைக்காக வைத்தால் செழிப்பு ஏற்படும் என்பதால் தனது வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாகவும், மேலும் காவலில் நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டதாகவும் நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News