இந்தியா

25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அதிகம் தாக்கும் மனஅழுத்தம்- இந்திய மனநல மருத்துவ சங்கம்

Published On 2026-01-30 07:30 IST   |   Update On 2026-01-30 07:30:00 IST
  • மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
  • அதே போல் ஆண்களும் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்திய மனநல மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலத்தில் அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடியது மன அழுத்தம். கல்வி, வேலை, வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதே போல் ஆண்களும் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெருமளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதற்கு செல்போனும் முக்கிய காரணமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில் இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் 77-வது ஆண்டு தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. நாளை (சனிக்கிழமை) வரை இந்த மாநாடு நடக்கிறது.

இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மனநல டாக்டர்கள், மருத்துவ வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

அதில் பல அதிர்ச்சியூட்டும், கவலைக்குரிய விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அவை வருமாறு:-

மன நல பிரச்சினைகள் வாழ்வின் பிற்பகுதியில் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இளம்பருவத்திலோ அல்லது இளமைப்பருவத்திலோ முன்கூட்டியே வெளிப்படுகின்றன.

மனச்சோர்வு, போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் மற்றும் நடத்தை சார்ந்த பழக்கங்களும் தற்போது குறைந்த வயதிலேயே பதிவாகின்றன.

34.6 சதவீத மன அழுத்த பிரச்சினைகள் 14 வயதுக்கு முன்பும், 48.4 சதவீதம் 18 வயதுக்கு முன்பும், 62.5 சதவீதம் 25 வயதுக்குள்ளும் தொடங்குகின்றன.

இது கல்வி முடிவுகள், தொழில் பாதைகள், உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

2011-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மன உளைச்சல் 101.7 சதவீதம் அதிகரித்துள்ளன.

60 சதவீத மன அழுத்த பிரச்சினைகள் 35 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கிறது. "கல்வி அழுத்தம், வேலையின்மை, சமூகத் தனிமைப்படுத்தல், டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தீர்க்கப்படாத உணர்ச்சித் துயரம் ஆகியவற்றின் சிக்கலான கலவையே இதற்கு காரணம்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட நபர்களின் தற்கொலைக்கு மனநல பிரச்சினைகள் மூன்றாவது முக்கிய மரணக் காரணமாக உள்ளது. இளைஞர்களிடையே உள்ள மனநல சவால்களை தாக்குப்பிடிக்க முடியாத நிலையே தற்கொலையை தூண்டுகிறது என்கிறது அந்த அறிக்கை. இது ஒரு பொது சுகாதார அவசரநிலையாக மாற்றுகிறது.

"மன அழுத்த பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது, அவை பெரும்பாலும் நாள்பட்டவையாக மாறி, நீண்ட கால இயலாமைக்கும், குறிப்பிடத்தக்க சமூக சிக்கல்களுக்கும் மற்றும் பொருளாதாரச் செலவுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கும்" என்று இந்திய மனநல மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News