இந்தியா

மதுரை விமான நிலையம் மேம்படுத்தப்படும்: மக்களவையில் விமான போக்குவரத்து மந்திரி உறுதி

Published On 2026-01-30 05:47 IST   |   Update On 2026-01-30 05:47:00 IST
  • தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை.
  • இங்கு சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி கிஞ்சராப்பு ராம்மோகன் நாயுடு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை. எனவே, இதை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்தின் மேம்பாட்டுக்காக அரசு குறிப்பாக விமானப் போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தற்போது விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையத்துக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிர பரிசீலனையில் உள்ளது.

மதுரை-சென்னை மற்றும் மதுரை-பெங்களூரு விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நிச்சயம் பேசப்படும். அந்த நிறுவனங்களின் திறனுக்கு உட்பட்டு நிச்சயம் அது அமல்படுத்தப்படும்.

மதுரை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களைப் பொறுத்தவரை மதுரை விமான நிலையம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான இடம். எனவே, அதை மேம்படுத்தும் நோக்கில் எங்கள் பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News