கேரள கோவில் திருவிழாவில் ஆர்.எஸ்.எஸ் பாடல் மற்றும் கொடிகள்.. காங்கிரஸ் கடும் கண்டனம்
- அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டுக்கலில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) நிர்வகிக்கும் ஒரு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை விழாவில் ஆர்.எஸ்.எஸ்.இந்தன் 'கான கீதம்' (பிரார்த்தனை பாடல்) பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட 'கான மேளா' (இசை கச்சேரி) நிகழ்ச்சியின் போது, தொழில்முறை இசைக் குழுவின் உறுப்பினர்களால் ஆர்எஸ்எஸ் பாடல் இசைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் கொடிகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோயில் திருவிழாவின் போது 'ஆர்.எஸ்.எஸ். கானகீதம்' பாடலைப் பாடுவது தீவிரமான கவலைக்குரிய விஷயம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன், அரசியல் நிகழ்வுகளுக்கு கோயில்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், கோவில்களில் விதிமீறல் நடந்துள்ளது கவலைக்குரிய விஷயம். இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவசம் போர்டை வலியுறுத்தினார்.
கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை, கோயில் வளாகங்களையும் திருவிழாக்களையும் அரசியலாக்குவது குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.