இந்தியா

"தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி.. லடாக்கில் தேச மகனை சுட்டுக் கொன்ற பாஜக" - ராகுல் காந்தி

Published On 2025-10-01 05:00 IST   |   Update On 2025-10-01 05:00:00 IST
  • பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன என்று அவரின் தந்தை தெரிவித்தார்.
  • லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

லடாக்கில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை லேவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் உடனான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் முன்னாள் ராணுவ வீரரான ட்சேவாங் தார்ச்சின் என்பவரும் ஒருவர். 1999 முதல் 2017 வரை அவர் ராணுவத்தில் பணியாற்றினார். சியாச்சின் பனிமலையில் பணியாற்றியவர் ஆவார். கார்கில் போரில் அவர் பங்குபெற்றார். அவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

மகன் இறப்பு குறித்து தந்தை அளித்த பேட்டியில், "என் மகன் ஒரு தேசபக்தன். அவன் கார்கில் போரில் போராடினான். மூன்று மாதங்கள் போர்முனையில் இருந்தான்.

டா டாப் மற்றும் டோலோலிங்கில் பாகிஸ்தானியர்களுடன் சண்டையிட்டான். பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

அவரின் பேட்டியை பகிர்ந்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "தந்தை ராணுவத்தில், மகன் ராணுவத்தில் - தேசபக்தி அவர்களின் இரத்தத்தில் ஊறுகிறது.

லடாக்கிற்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக பாஜக அரசு இந்த துணிச்சலான தேச மகனை சுட்டுக் கொன்றது. 

தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றன: இன்று தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி இதுதானா?

லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

மோடி ஜி, நீங்கள் லடாக் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் - வன்முறை மற்றும் பயத்தின் அரசியலை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News