இந்தியா

பாண்டவர்கள் போல மனைவியை வைத்து சூதாடிய கணவர்- கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Published On 2025-11-17 12:09 IST   |   Update On 2025-11-17 12:09:00 IST
  • தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை.
  • பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

டேனிஷ் குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையாகி இருந்தார். எப்போதும் சூதாட்டம் ஆடிக் கொண்டுதான் இருப்பார். சூதாட்டத்தில் பணம், பொருட்களை நிறைய இழந்துள்ளார்.

இந்த நிலையில் தன் மனைவியிடம் அவரது வீட்டிற்கு சென்று நகை, பணம் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அவர் வாங்கி வரவில்லை. தான் கேட்டும் நகை, பணம் வாங்கி வராததால் மனைவி மீது டேனிஷ் ஆத்திரத்தில் இருந்தார்.

தான் வழக்கமாக சூதாடும் இடத்திற்கு சென்ற அவரிடம் அன்று பணம் இல்லை. ஆனால் சூதாடாமல் அவரால் இருக்க முடியவில்லை. அப்போது என்ன செய்யலாம் என்று யோசித்த அவர் பணத்திற்கு பதிலாக தனது மனைவியை பணயமாக வைத்து சூதாடினார். துரதிர்ஷ்டவசமாக அன்று அவர் சூதாட்டத்தில் தோற்று போனார். இதனால் அவர் தனது மனைவியை இழக்க நேரிட்டது. பணயமாக வைத்த மனைவியை கொண்டு சென்று தோற்றவர்களிடம் ஒப்படைத்தார்.

சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 8 பேர் கும்பல் அவரது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். இதனை கணவரிடம் கூறியும் அவர் செவி சாய்க்கவில்லை. இதையடுத்து அந்த 8 பேர் கும்பலும் அவரது மனைவியை கட்டாயப்படுத்தி மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் அந்த பெண் பலவீனம் அடைந்தாள்.

அந்த 8 பேர் கும்பலுடன் சேர்ந்து டேனிசும் அவரது மனைவியை துன்புறுத்தி அவரை ஆற்றில் தூக்கி வீசினார். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டனர்.

இதையடுத்து அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில் தனது மாமனார் மற்றும் மேலும் 2 பேரும் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News