இந்தியா

தொகுதி பங்கீடு இழுபறி: உத்தவ் தாக்கரேயிடம் ஒரு மணி நேரம் போனில் பேசிய ராகுல் காந்தி

Published On 2024-02-23 06:12 GMT   |   Update On 2024-02-23 06:12 GMT
  • மும்பை தொகுதிகளை பிரிப்பதில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே கட்சி இடையே இழுபறி.
  • நான்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளது.

இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் துரிதப்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி, அகிலேஷ் யாதவ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்துள்ளது.

தற்போது மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைவதற்கான வேலைகளை காங்கிரஸ் செய்து வருகிறது. 2019 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), காங்கிரஸ் ஆகியவை மகா கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இது பொருந்தாத கூட்டணி என விமர்சனம் செய்யப்பட்டது.

பின்னர் ஏக் நாத் ஷிண்டே, தனது அணிதான் சிவசேனா கட்சி என அறிவித்து பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதனால் மகா கூட்டணி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து போனது.

தற்போது மகா கூட்டணி மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. 48 தொகுதிகளை மூன்று கட்சிகளும் பகிர்ந்து கொண்டு போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

உத்தவ் தாக்கரே 18 தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். மேலும் மும்பையில் உள்ள தெற்கு மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, தென்மேற்கு மும்பை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

அதேவேளையில் காங்கிரஸ் மும்பையில் தென்மத்திய மும்பை, வடக்கு மத்திய மும்பை, வடமேற்கு மும்பை ஆகிய தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

மும்பையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. இதனால் ராகுல் காந்தி நேற்று உத்தவ் தாக்கரேயிடம் சுமார் ஒரு மணி நேரம் போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது மும்பை தொகுதிகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மூன்று கட்சிகளுக்கு இடையில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரே கட்சி 22 இடங்களில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் மும்பையைச் சேர்ந்த மூன்று தொகுதிகளும் அடங்கும்.

40 தொகுதிகள் குறித்து முடிவு செய்து விட்டதாகவும், 8 தொகுதிகள்தான் இழுபறியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜனதாவுக்கு கைக்கெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா திகழ்கிறது. இந்த மகா கூட்டணி 48 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால் அது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக கருதப்படும்.

2019 தேர்தல் பா.ஜனதா- உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பாஜனதா 23 இடங்களை கைப்பற்றியிருந்தது.

Tags:    

Similar News