இந்தியா

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: ஜெர்மனி கருத்து தொடர்பாக பா.ஜ.க.-காங்கிரஸ் மோதல்

Published On 2023-03-31 08:19 IST   |   Update On 2023-03-31 08:19:00 IST
  • வெளிநாட்டு தலையீட்டை இந்தியா சகித்துக் கொள்ளாது.
  • காங்கிரஸ் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை எதிர்பார்ப்பது சோகமயமான யதார்த்தம்.

புதுடெல்லி :

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு தொடர்பாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது:-

இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல்காந்திக்கு எதிரான கோர்ட்டு தீர்ப்பு பற்றியும், அவரது எம்.பி. பதவி பறிப்பு பற்றியும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். ராகுல்காந்தி மேல்முறையீடு செய்யும் மனநிலையில் இருக்கிறார்.

அதில்தான், இந்த தீர்ப்பு நிற்குமா? பதவி பறிப்புக்கு முகாந்திரம் உள்ளதா? என்று தெரிய வரும். நீதித்துறை சுதந்திரம், அடிப்படை ஜனநாயக கொள்கைகள் ஆகியவை ராகுல்காந்திக்கு எதிரான வழக்கிலும் பயன்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கருத்து, பா.ஜனதா-காங்கிரஸ் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனி கருத்தை வரவேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியதாவது:-

ராகுல்காந்தியை துன்புறுத்துவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் எப்படி சமரசம் செய்து கொள்ளப்படுகிறது எனபதை கவனத்தில் கொண்டதற்காக ஜெர்மனி வெளியுறவு அமைச்சகத்துக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

திக்விஜய்சிங் வரவேற்புக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு சக்திகளை அழைத்ததற்கு ராகுல்காந்திக்கு நன்றி. வெளிநாட்டு சக்திகள், இந்திய நீதித்துறையில் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளிநாட்டு தலையீட்டை இந்தியா சகித்துக் கொள்ளாது. ஏனென்றால், நமது பிரதமர் பெயர் நரேந்திர மோடி.

இவ்வாறு அவர் கூறினார்.

அதற்கு காங்கிரஸ் சார்பில் அதன் ஊடகப்பிரிவு தலைவர் பவன்கேரா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

பிரதான பிரச்சினையில் இருந்து கிரண் ரிஜிஜு ஏன் திசைதிருப்புகிறார்? அதானி குறித்து ராகுல்காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமரால் பதில் சொல்ல முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. மக்களை திசைதிருப்புவதற்கு பதிலாக கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருக்கு பதிலடியாக, பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்ஜில் கூறியதாவது:-

இந்திய வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸ், வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை எதிர்பார்ப்பது சோகமயமான யதார்த்தம். கோர்ட்டுகளை காங்கிரசார் தினமும் இழிவுபடுத்துவதை நீதித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News