மகாராஷ்டிராவை 'இந்தி'மயமாக்கினால் போராட்டம் வெடிக்கும் - பாஜக அரசுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை
- மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது
- மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது?
மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது.
தற்போது மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3ஆவது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறை படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1ஆம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2, 3, 4 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடவடிக்கை இந்தி திணிப்பு என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, மும்மொழிக் கொள்கையை அரசு விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். அதனை கல்விக்கு கொண்டுவர வேண்டாம். மாநிலத்தில் அனைத்தையும் இந்திமயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை நவநிர்மாண் சேனா ஒருபோதும் ஏற்காது. நாங்கள் இந்துக்கள், ஆனால், இந்தி அல்ல. மாநிலத்தை இந்தி என்று சித்திரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால், இங்கு நிச்சயம் ஒரு போராட்டம் வெடிக்கும்.
இவற்றையெல்லாம் பார்த்தால், வேண்டுமென்றே போராட்டத்தை அரசாங்கம் உருவாக்குகிறது என்று தோன்றுகிறது. வரவிருக்கும் தேர்தல்களில் மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மும்மொழி கொள்கையை இந்தி திணிப்பு என தமிழ்நாடு முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.