கழிப்பறையை வாடிக்கையாளர் பயன்படுத்த அனுமதிக்காத பெட்ரோல் பங்கிற்கு ரூ1.65 லட்சம் அபராதம்
- காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார்.
- பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந்தேதி தனது காரில் காசர்கோட்டில் இருந்து எழம்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கோழிக்கோடு பய்யோலி தேனாங்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.
காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார். ஆனால் அவரை கழிப்பறையை பயன்படுத்த பங்க் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.
வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.