இந்தியா

போரை ஆதரிக்கவில்லை.. சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தானில் வைரல் - பாஜக அட்டாக்

Published On 2025-04-27 16:41 IST   |   Update On 2025-04-27 16:41:00 IST
  • "போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்" என வெளியிட்டு வருகின்றன.
  • சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது உளவுத்துறையின் தோல்வி.

26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய கர்நாடக முதல்வர சித்தராமையா, "நாங்கள் போரை ஆதரிக்கவில்லை. அமைதி நிலவ வேண்டும், மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த கருத்தை "போருக்கு எதிராக இந்தியாவிற்குள் இருந்து வரும் குரல்கள்" என ஜியோ நியூஸ் உள்ளிட்ட பிரபல பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இது குறித்து கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் ஊடகங்கள் சித்தராமையாவை புகழ்கின்றன.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக நேருவை பாராட்டி ராவல்பிண்டியில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதே போல் தற்போது சித்தராமையாவை பாராட்டி பாகிஸ்தானில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து செல்வார்களா?" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது கருத்து குறித்து விளக்கமளித்த சித்தராமையா, "பாகிஸ்தானுடன் போருக்கு செல்லக்கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.

போர் எதற்கும் தீர்வாகாது என்றுதான் சொன்னேன். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இது உளவுத்துறையின் தோல்வி. இந்திய அரசு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. போரை தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால், நாம் நிச்சயமாக போருக்கு செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News