சாலை விபத்தில் காயமடைவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம்- பிரதமர் விரைவில் தொடங்கி வைக்கிறார்
- விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
- உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
புதுடெல்லி:
சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி, சண்டிகாரில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. பின்னர், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், விரைவில் நாடு முழுவதும் இத்திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து மந்திரிகளின் வருடாந்திர கூட்டம், நிதின் கட்காரி தலைமையில் நடந்தது. அதில், சாலை பாதுகாப்பு, பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது இத்தகவலை தெரிவித்தார். கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தின்படி, நாட்டின் எந்தவகையான சாலையிலும் மோட்டார் வாகன பயன்பாட்டின் மூலம் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்களுக்கு நபர் ஒருவருக்கு விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.
அதே சமயத்தில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பரிசோதனை அடிப்படையில் அமலுக்கு வந்ததில் இருந்து 20 சதவீத கட்டணமில்லா சிகிச்சை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.