இந்தியா

மோடி அரசு பதில் அளிக்க வேண்டும்: ஒரே ஒரு தேர்தல் கமிஷனர் மட்டுமே இருப்பது ஏன்? மல்லிகார்ஜூன கார்கே

Published On 2024-03-10 12:42 IST   |   Update On 2024-03-10 12:42:00 IST
  • இரண்டு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.
  • சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் தேர்தல் கமிஷனர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார். 2027-ம் ஆண்டு டிசம்பரில் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் மற்றொரு தேர்தல் கமிஷனராக இருந்த அனூப் பாண்டே ஓய்வு பெற்றார். இதையடுத்து 3 பேர் கொண்ட தேர்தல் ஆணைய குழுவில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மட்டுமே பதவியில் உள்ளார். இரண்டு தேர்தல் ஆணையர் பதவியிடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசை கேள்வி எழுப்பி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தேர்தல் ஆணையமா? அல்லது தேர்தல் புறக்கணிப்பா? இன்னும் சில நாட்களில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவில் தற்போது ஒரே ஒரு தேர்தல் கமிஷனர் மட்டுமே இருப்பது ஏன்?

நான் முன்பு கூறியது போல், சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜனநாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும். வீழ்ச்சி அடைந்த கடைசி அரசியலமைப்பு நிறுவனமாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது இருக்கும்.

மோடி அரசு பதில் அளிக்க வேண்டும்

தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடு எடுக்கும் புதிய நடைமுறை தற்போது ஆளும்கட்சிக்கும், பிரத மருக்கும் அனைத்து அதி காரங்களை வழங்கியுள்ள நிலையில் 23-ந் தேதி பதவி காலம் முடிந்த பிறகும் புதிய தேர்தல் கமிஷனரை நியமிக்காதது ஏன்?

இந்த கேள்விகளுக்கு மோடி அரசு பதில் சொல்லி நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

Tags:    

Similar News