இந்தியா

'மகா. வளர்ச்சியை வேறு மாநிலத்துக்கு திருப்பும் பாஜக '- ராகுல் பொய் சொல்வதாக தேர்தல் ஆணையத்தில் புகார்

Published On 2024-11-12 07:08 IST   |   Update On 2024-11-12 07:08:00 IST
  • மகாராஷ்டிராவின் தொழில் முதலிய வளர்ச்சி வாய்ப்புகள் மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது.
  • மகாராஷ்டிராவில் திட்டமிடப்பட்ட முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி குஜராத்துக்கு மாற்றப்பட்டது.

288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு வரும் நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரசின் மகா விகாஸ் அகாதி கூட்டணியும் பாஜவின் மாகாயுதி கூட்டணியில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி பொய்களை கூறிவருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையிலான பாஜக குழு உயர் மட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து புகார் மனுவை சமர்ப்பித்துள்ளது.

அந்த மனுவில், ராகுல் காந்தி தேர்தல் ஆணைய நடத்தை விதிகளை மீறி பொய்களை பரப்பி வருகிறார். மகாராஷ்டிரா மற்றும் மாநிலங்களிடையே விரோதத்தை வளர்த்து இந்திய ஒன்றியத்துக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார்.

தேர்தல் வெற்றிக்காக பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'மகாராஷ்டிராவின் தொழில் முதலிய வளர்ச்சி வாய்ப்புகள் மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. மகாராஷ்டிராவின் பணத்தில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி மற்றும் போயிங் விமானங்கள் உற்பத்தி மற்ற மாநிலங்களில் நடந்து வருகிறது' என்ற ராகுல் காந்தியின் பேச்சு மகாராஷ்டிர இளைஞர்களை தவறான வழியில் வழிநடத்துகிறது.

மகாராஷ்டிராவுக்கு 2024- 25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ரூ. 70,795 கோடி அந்நிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்று பாஜக தரப்பு கூறுகிறது.

முன்னதாக நாட்டிலேயே முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி ஆலை சமீபத்தில் குஜராத் மாநிலம் வதோதராவில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆலையை டாடா நிறுவனம் மகாராஷ்டிராவில் திறக்க திட்டமிட்டிருந்த நிலையில் அரசியல் லாபத்துக்காக மோடி அரசு அதை குஜராத்துக்கு திருப்பி விட்டதாக மாகா. எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது 

Tags:    

Similar News