இந்தியா

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா

நாளுக்குநாள் செல்வாக்கை இழந்து வருகிறது: பா.ஜனதாவில் இருந்து 40 தலைவர்கள் விலகல்

Published On 2023-04-15 02:11 GMT   |   Update On 2023-04-15 02:11 GMT
  • பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது.
  • பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார்.

பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பா.ஜனதா அவரது கொள்கைகளை அவமதித்துள்ளது. கர்நாடகத்தில் போலி இட ஒதுக்கீடு வழங்கி அம்பேத்கருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. இந்த போலி இட ஒதுக்கீடு மூலம் லிங்காயத், ஒக்கலிகர், ஆதிதிராவிடர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.

முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அடுத்த விசாரணை நடைபெறும் வரை நிறுத்தி வைக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் முன்பு கூறிய அனைத்து கருத்துக்களும் தற்போது உண்மையாகி உள்ளது.

பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசு, கா்நாடக மக்களுக்கு இரட்டை துரோகம் செய்துள்ளது. கர்நாடக அரசின் இட ஒதுக்கீடு முடிவுக்கு அரசியல் சாசன ரீதியாக உரிய அங்கீகாரம் கிடைக்காது. அம்பேத்கரின் ஜெயந்தியை கொண்டாடும் இந்த நேரத்தில் கர்நாடக மக்களுக்கு இந்த பா.ஜனதா அரசு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சமூகங்களின் மக்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.

இட ஒதுக்கீடு உயர்வு நிலை பெற வேண்டுமெனில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த முயற்சியை பா.ஜனதா மேற்கொள்ளாதது ஏன்?. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார். பா.ஜனதா நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

Tags:    

Similar News