குலசேகரபட்டினத்தில் இருந்து எப்போது விண்கலங்கள் செலுத்தப்படும்?: இஸ்ரோ தலைவர் பேட்டி
- வரும் 12-ம் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.
- பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறியமுடியும் என்றார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வரும் 12-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-62 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதையடுத்து இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் 3 விஞ்ஞானிகள் இன்று காலை ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். அப்போது பி.எஸ்.எல்.வி சி-62 விண்கல மாதிரியை ஏழுமலையான் காலடியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
சாமி தரிசனத்திற்கு பின் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:
கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-61 தோல்வியடைந்தது.
வரும் 12-ம் தேதி காலை 10 மணி 17 நிமிடங்களுக்கு பி.எஸ்.எல்.வி சி-62 விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவவேண்டும் என்பதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம்.
பி.எஸ்.எல்.வி சி 62 மூலம் விவசாயம், ராணுவம் மற்றும் தட்பவெப்ப நிலைகள் அறியமுடியும்.
இந்த ஆண்டு இறுதியில் குலசேகரபட்டினத்தில் இருந்து விண்கலங்களை விண்ணில் செலுத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.
2027-ம் ஆண்டு சூரியனை ஆய்வுசெய்ய செயற்கைக்கோளை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதற்கு முன் 3 முறை ஆளில்லாத விண்கலங்களை சூரியனை ஆய்வுசெய்ய அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆண்டில் முதல்முறையாக இமாதம் 12-ம் தேதி இஸ்ரோ விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது.
இதன்மூலம் இதுவரை பல்வேறு வெளிநாடுகளின் 442 விண்கலங்களை விண்ணில் செலுத்திய பெருமை இஸ்ரோவுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.