இந்தியா ஒரு உலகளாவிய வல்லரசாக உள்ளது: இஸ்ரேல் வெளியுறவு மந்திரி
- இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கிடியோன் சர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி:
இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி கிடியோன் சர் இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். தலைநகர் டெல்லியில் அவரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாத சவால்களைச் சந்தித்து வருகின்றன. பயங்கரவாதம், அதன் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்வதற்கு நாம் இணைந்து செயல்படுவது அவசியம். சமீப காலமாக இந்தியா பல புதிய திறன்களை உருவாக்கி உள்ளது. குறிப்பாக ரெயில், சாலை மற்றும் துறைமுக உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம் ஆகியவற்றில். இஸ்ரேலில் உள்ள வாய்ப்புகளை ஆராய எங்கள் குழுவினர் ஆர்வமாக உள்ளனர். அதற்கு நாங்கள் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவு மந்திரி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா ஒரு உலகளாவிய வல்லரசாக உள்ளது. இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளன.
நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இந்தியாவின் நட்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். பாதுகாப்பு மற்றும் புதுமை முதல் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வர்த்தகம் வரை பரவியுள்ளது.
இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகி வருகின்றன என்பதை வலியுறுத்துகிறோம்.
பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பொருளாதாரத்தில் நாங்கள் முன்னேறி வருகிறோம், ஆனால் அதை வலுப்படுத்த எப்போதும் ஆர்வம் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.