இந்தியாவின் Tiger Man.. வனவிலங்கு பாதுகாவலர் வால்மிக் தாப்பர் மறைவு - யார் இவர்?
- வால்மிக் பிரபல பத்திரிகையாளர் ரொமேஷ் தாப்பரின் மகன்.
- ரந்தம்போர் அறக்கட்டளையை அவர் நிறுவினார்.
இந்தியாவின் புலி மனிதன் என்று அழைக்கப்படும் புலிகள் பாதுகாவலர் வால்மிக் தாப்பர் (73) காலமானார்.
புற்றுநோயுடன் போராடி வந்த அவர், டெல்லியின் கௌடில்யா மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார். இன்று மாலை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
வால்மிக் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வனவிலங்கு பாதுகாப்புக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். குறிப்பாக இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தினார்
1988 ஆம் ஆண்டில், வனவிலங்கு பாதுகாப்புக்கான இலாப நோக்கற்ற அமைப்பான ரந்தம்போர் அறக்கட்டளையை அவர் நிறுவினார்.
புலி வேட்டையை தடுத்து, இயற்கை புலி வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்காக போராடினார்.
வால்மிக் பிரபல பத்திரிகையாளர் ரொமேஷ் தாப்பரின் மகன். புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர், ரோமேஷ் தாப்பரின் சகோதரியாவார். புகழ்பெற்ற பத்திரிகையாளர் கரண் தாப்பரும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
வால்மிக் தாப்பர் வனவிலங்குகள் பற்றிய 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி திருத்தியுள்ளார். அவற்றில், புலிகளின் நிலம்: இந்திய துணைக் கண்டத்தின் இயற்கை வரலாறு (1997) மற்றும் புலி தீ: இந்தியாவில் புலியின் 500 ஆண்டுகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை. இதுதவிர பல ஆவணப்படங்களை உருவாக்கினார்.
தேசிய வனவிலங்கு வாரியம் உட்பட 150க்கும் மேற்பட்ட அரசு குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களில் தாப்பர் பணியாற்றியுள்ளார்.
மனித தலையீடு இல்லாத புலிகளுக்கான ஒரு பகுதியை உருவாக்க அவர் தனது வாழ்நாள் முழுவதும் வாதிட்டார்.