இந்திய வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
- பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் வெடித்தது.
- இந்த மோதல் இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டியது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7-ம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த மோதல் இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டியது.
இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வான்பரப்பை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை தடை விதித்தது. இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய வான்பரப்பிற்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைய அடுத்த மாதம் 24-ம் தேதி வரை தடை விதித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.