இந்தியா

கனமழை பெய்யாவிட்டால் நிலைமை விரைவில் சீராகும்- கெஜ்ரிவால் தகவல்

Published On 2023-07-15 09:26 GMT   |   Update On 2023-07-15 09:26 GMT
  • யமுனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
  • தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம். தயவு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவுங்கள்.

புதுடெல்லி:

பருவமழை காரணமாக வட மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இங்கு பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வரலாறு காணாத மழை கொட்டியது. யமுனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

டெல்லியின் ஐ.டி. 3 மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் படை வரவழைக்கப்பட்டது. ஹனுமான் மந்தர், யமுனா பஜார், சீதா காலனி, சிவில் லைன்ஸ்களுக்கு வெளியே உள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் யமுனா ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது:-

யமுனை நதிநீர் மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது. கனமழை பெய்யாவிட்டால் நிலைமை விரைவில் சீராகும். வஜிராபாத் மற்றும் சந்திரவால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம். தயவு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவுங்கள்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

யமுனை நதியில் இன்னும் 205.33 மீட்டர் அபாய அளவை விட 2 மீட்டருக்கு மேல் செல்கிறது. வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 208.66 ஆக இருந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி நீர் மட்டம் 207.62 ஆக குறைந்துள்ளது.

இதற்கிடையே டெல்லியில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Tags:    

Similar News