இந்தியா

கர்நாடகா முதலமைச்சராக தொடர்ந்து நீடிப்பேன் - சித்தராமையா திட்டவட்டம்

Published On 2025-10-01 21:50 IST   |   Update On 2025-10-01 21:50:00 IST
  • சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.
  • சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார்

நவம்பர் புரட்சி பற்றி சிலர் பேசுகின்றனர். 5 ஆண்டுகளும் நானே முதலமைச்சராக நீடிப்பேன். ஆனால் மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்

கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.

இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2 ½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சித்தராமையா மற்றும் டிகே. சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே முதல்-மந்திரி பதவி தொடர்பாக கடும் விவாதம் நடந்து வருகிறது.

மேலும் இது தொடர்பாக அடிக்கடி சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், நவம்பரில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய சித்தராமையா, "நவம்பர் மாதத்துடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடையும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். நான் சொல்ல வருவது என்னவென்றால், மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக வரமாட்டேன் என்று சிலர் கணித்தார்கள், ஆனால் நான் முதலமைச்சரானேன். என் காரில் காகம் அமர்ந்திருப்பது ஒரு கெட்ட சகுனம் என்றும் நான் முதலமைச்சராகத் தொடர மாட்டேன் என்றும் பலர் சொன்னார்கள். நான் பட்ஜெட்டை தாக்கல் செய்ய மாட்டேன் என்றும் சொன்னார்கள், ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்தேன்.

நான் இரண்டரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டேன். மேலும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News