இந்தியா

கனமழை எதிரொலி: சபரிமலைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

Published On 2023-11-23 03:28 GMT   |   Update On 2023-11-23 03:28 GMT
  • பத்தினம்திட்டா மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
  • சபரிமலையில் கனமழை பெய்து வருவது பக்தர்களுக்கு பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.

இதற்கிடையே, கேரளாவில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். தற்போது அங்கு கனமழை பெய்து வருவது பக்தர்களுக்கு பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.

மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கோவில் நிர்வாகமும், பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதன்படி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News