இந்தியா

அரியானா தொழிலாளர் நலத்துறையில் ரூ.1,500 கோடி ஊழல் அம்பலம் - விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

Published On 2026-01-03 14:38 IST   |   Update On 2026-01-03 14:38:00 IST
  • பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.
  • ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரியானா மாநில தொழிலாளர் நலத்துறையில் சுமார் ரூ.1,500 கோடி ஊழல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் அரியானா மாநிலத்தின் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார்.

இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற வேண்டுமானால், அவர்கள் ஒரு வருடத்தில் குறைந்தது 90 நாட்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதற்கான ஆதாரமே ஒர்க் ஸ்லிப் ஆகும்.

இந்நிலையில் அரியானாவில் தொழிலாளர் நல வாரியத்தில் இருக்கும் நிதியைப் பெறுவதற்காக, கட்டுமானப் பணியில் ஈடுபடாத ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலாளர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்குப் போலி ஒர்க் ஸ்லிப்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுமார் ரூ.1,500 கோடி ரூபாய் நலத்திட்ட நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

போலிப் பதிவுகளைக் கண்டறிய அனில் விஜ் உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் பல மாவட்டங்களில் தகுதியற்றவர்களுக்குத் திட்டப் பயன்கள் சென்றடைந்தது தெரியவந்தது.  

இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த அரியானா முதல்வர் நாயப் சிங் சைனி 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News