பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கோடரியால் வெட்டிக் கொன்று போலீசில் சரணடைந்த 18 வயது பெண்
- பெண் தனியாக இருப்பதை அறிந்த சுக்ராம் பிரஜாபதி, கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார்.
- உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற நபரை இளம்பெண் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மாநிலம் பண்டா மாவட்டத்தில் தந்தையை இழந்த 18 வயது இளம்பெண் தனது தாயுடன் வசித்து வந்தார்.
ஜனவரி 1 ஆம் தேதி தாய் வேலைக்கு சென்ற நிலையில் அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மதியம் 3.30 மணியளவில் பக்கத்துக்கு வீட்டுக்காரரான சுக்ராம் பிரஜாபதி (50),பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர், கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அப்பெண் தன்னை தற்காத்துக்கொள்ள அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் சுக்ராம் அப்பெண்ணை தடுத்துள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்த இளம்பெண், தற்காப்பிற்காக அவரை வெட்டியுள்ளார். இதில் சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு, அப்பெண் ரத்தம் படிந்த கோடாரியுடன் நேராக அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைச் சொல்லி சரணடைந்தார்.
உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் தற்காப்பிற்காகவே இந்தச் செயலைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்காப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை விடுவிக்கத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.