கேரளாவில் இன்னும் 4-5 நாட்களில் பருவமழை தொடங்கும்..! இன்று 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
- கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வருகிற 23-ந்தேதி வரை பல மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே வருகிற 27-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இன்னும் நான்கு, ஐந்து நாட்களில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் முன்னதாகவே தொடங்க இருக்கிறது.
இந்தநிலையில் அங்கு பல மாவட்டங்களில் தற்போதே மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. இன்று 12 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோழிக்கோடு, வயநாடு கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வருகிற 23-ந்தேதி வரை பல மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.